உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள், எதிர்கால 25-50 ஆண்டுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் முனைவுகள், மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, உயர்கல்வியை வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ப, பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டங்களை புதுப்பித்து, ஆராய்ச்சிக்கு அதிக முன்னுரிமை வழங்கி, மாணவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கும் வகையில் புதிய கொள்கைகளை அமல்படுத்தி வருகின்றன.
இந்த மாற்றங்கள், உலகளாவிய உயர்கல்வி வாய்ப்புகளோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு பெரும் அளவில் உதவித்தொகைகள் (ஸ்காலர்ஷிப்கள்) கிடைக்க வழிவகுக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மென்பொருள் தொழில்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போல், தற்போது உலகளாவிய கல்வி வாய்ப்புகளும் இந்திய மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கின்றன.
இந்திய மாணவர்களின் வெளிநாட்டு பயணம்
சமீபத்திய தகவல்கள், இந்திய மாணவர்கள் உலகம் முழுவதும் உயர்கல்விக்காக அதிக எண்ணிக்கையில் பயணிக்கத் தொடங்கியதை உறுதி செய்கின்றன. உதாரணமாக, 2015-2016 கல்வியாண்டில், அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1.75 லட்சமாக இருந்தது. அதே ஆண்டில், ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற இந்திய மாணவர்கள் சுமார் 55,000 பேர்.
2016-2021 காலகட்டத்தில், மொத்தமாக 22 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், 33 நாடுகளுக்கு உயர்கல்விக்காக சென்றுள்ளனர். இதற்கிடையில், தமிழகத்திலிருந்து மட்டுமே கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்கச் சென்றுள்ளனர். ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுடன் சேர்ந்து, இந்த ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 56% ஆக இருக்கிறது.
ஆய்வுத் துறையில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு
உயர்கல்விக்காக மட்டுமல்லாமல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காகவும், பேராசிரியர் மற்றும் விஞ்ஞானி பணி வாய்ப்புகளுக்காகவும் இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
2008ஆம் ஆண்டு, முனைவர் பட்ட ஆய்விற்காக நார்வே நாட்டில் பயணித்தபோது, அங்கு பணியாற்றும் இந்திய பொறியியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் 2022ஆம் ஆண்டிற்குள், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல், சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளும், இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை பெருமளவில் வழங்கி வருகின்றன. குறிப்பாக, சீனாவில் 2021ஆம் ஆண்டிலேயே 29,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்!
உலகளவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், இந்திய மாணவர்களுக்கு அதிக அளவில் உதவித்தொகைகள் வழங்குகின்றன. இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, வெளிநாட்டில் உயர்கல்வியைப் பயின்று, தொழில்நுட்ப உலகில் முக்கிய பங்கு வகிக்க இந்திய மாணவர்களுக்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.