குழந்தையின் முடி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்?

குழந்தைகளின் முடியானது மிகவும் மென்மையானதாக இருக்கும். எனவே அதனை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. பெற்றோர்கள் எப்பொழுதும் தங்கள் குழந்தையின் முடியானது நன்றாக செழிப்பாக பொசு பொசுவென அடர்த்தியாக வளர வேண்டும் என்று விரும்புவார்கள். பெற்றோர்களே! இந்த பதிவில் குழந்தையின் முடி நன்றாக பொசு பொசுவென அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்? (Tips to grow hair for babies in Tamil) என்பதை பற்றிய குறிப்புகளை உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

குழந்தைகளின் முடி வளர்ச்சி

குழந்தைகளின் முடி வளர்ச்சியானது குழந்தையானது தாயின் வயிற்றிலிருந்து வெளி உலகத்துக்கு வரும் முன்பே ஆரம்பித்து விடும். குழந்தையானது 14 வாரக் கருவாக இருக்கும் போதே, கருவின் முகம் மற்றும் உடல் முழுவதும் மெல்லிய ரோமப் படலம் தென்பட ஆரம்பித்து விடும். 30வது வாரத்தில் குழந்தையின் தலையில் முடி வளர்ச்சி ஆரம்பிக்கும். மேலும் 32வது வாரத்தில் கண் இமைகள் மற்றும் புருவங்கள் வளர ஆரம்பிக்கும். குழந்தையின் உடலைப் போர்த்திய மெல்லிய ரோமப்படலம் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்ததுமே உதிர்ந்து விடும்.

ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே கருகருவென தலை நிறைய முடியுடன் இருக்கும். மேலும் ஒரு சில குழந்தைகள் தலையில் கொஞ்சம் கூட முடி இல்லாமல் பிறக்கும். எப்படியும் குழந்தை பிறந்த சிலநாட்களில் முடி உதிரும். இந்த முடி உதிர்வு இயற்கையான ஒரு நிகழ்வுதான் என்பதால் அது குறித்து பயப்படத் தேவையில்லை. அவ்வாறு முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடி வளரத் தொடங்கும்.

இதையும் படிங்க: குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்

குழந்தைக்கு 6 மாதமாகும் போது, அதன் தலையில் நன்றாக முதிர்ந்த முடிகள் வளர ஆரம்பிக்கும். குழந்தைப் பருவத்தில் இருக்கும் முடி வளர்ச்சியை வைத்து எதிர்கால முடி வளர்ச்சியை முடிவு செய்தல் கூடாது. குழந்தைகளின் முடி வளர்ச்சியானது, ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தை சந்தித்தபடி இருக்கும்.

குழந்தைகளின் முடி வளர்ச்சியின் இரு நிலைகள்

குழந்தையின் முடி வளர்ச்சியானது இரு நிலைகளை கொண்டது. அவை.

  • குழந்தை கருவிலிருக்கும் போதான நிலை
  • பிரசவத்துக்குப் பிறகான நிலை

பிரசவத்துக்குப் பின்னர் குழந்தையின் முடி வளர்ச்சியானது 18 மாதங்கள் கழித்து கூட ஆரம்பிக்கலாம். இது இரண்டாம் கட்ட வளர்ச்சி எனப்படும். இது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்குள் இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். ஆனால் அது வெளிப்படையாக தெரியாது.

இதையும் படிங்க: தாய்ப்பால் சேமிக்க உதவும் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்துவது எப்படி?

ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிந்து, முடி முற்றிலும் உதிர்ந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் சில மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு கூட குழந்தையின் தலையில் முடி இல்லாமல் இருப்பதைப் பார்க்கலாம். முதல் கட்ட வளர்ச்சியில் காணும் முடியின் தன்மை மற்றும் நிறமானது இரண்டாம் கட்ட வளர்ச்சியில் மாறுபடும்.

முடி உதிர்வு 

பிறந்த குழந்தைகளுக்குக் கூட முடி உதிர்வு இருக்கும் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அது உண்மை தான். ஒரு சில குழந்தைகளுக்கு பிறப்பதற்கு முன்பே கூட முடி உதிர்வு இருக்கும்.  இதன் காரணமாக பிறக்கும் குழந்தையானது முடி இல்லாமல் கூட பிறக்கலாம்.  ஒரு சில குழந்தைகளுக்கு பிறந்து 6 மாதங்கள் கழித்தும் முடி உதிர்வு ஏற்படும். ஒரு சில குழந்தைகளுக்கு முடி உதிர்வு திடீரென நிகழலாம். மேலும் ஒரு சில குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல கூட நிகழலாம்.

Tips to grow hair for babies | குழந்தையின் முடி வளர்ச்சிக்கு டிப்ஸ்

1. ஊட்டசத்துக்கள் 

சமச்சீரான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகள் குழந்தையின் முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ, பி சத்துக்கள் குழந்தைகளின் முடியின் தரத்தை மேம்படுத்தும். பப்பாளி, கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் பருப்புகள் போன்றவற்றில் இந்த சத்துக்கள் உள்ளது.

2. எண்ணெய் மசாஜ் 

குழந்தைக்கு தொடர்ந்து எண்ணெய் வைத்து மசாஜ் செய்து வந்தால் ஸ்கால்புக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லும். இதனால் குழந்தைகளின் முடிவளர்ச்சியும் சீராக இருக்கும். மேலும் முடிக்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கும்.

3. முடியை அலசுங்கள்

குழந்தைகளின் முடியை 2-3 நாளைக்கு ஒருமுறை அலச வேண்டும். முடியை அலசுவதால் வியர்வையால் உண்டாகும் அழுக்கு மற்றும் கிருமிகள் நீங்கும். 9 மாதத்திற்குட்பட்ட குழந்தைக்கு தினமும் ஷாம்பூ போட வேண்டாம். குழந்தைகளுக்கு முடியை அலச பட்டாணி அளவுக்கு ஷாம்பூ போதுமானது.

4. இயற்கை கண்டிஷனர் 

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் கண்டிஷனர் இயற்கையானதாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. தயிர், செம்பருத்தி, முட்டை போன்ற இயற்கை கண்டிஷனர் பயன்படுத்தலாம். இதனால் குழந்தைகளின் முடி ஆரோக்கியமாகும்.

5. முடியை துவட்டுதல் 

குழந்தைகளின் முடியை அலசிய பின்னர் துவட்டும் பொழுது மிதமான அழுத்தத்தில் துவட்ட வேண்டும். வேகமாக தேய்க்கக் கூடாது. குழந்தைகளின் முடியை ஒத்தி எடுப்பது மிகவும் சிறந்தது.

6. முடியை வாருதல் 

குழந்தைகளின் முடியை சீப்பு/பிரஷ் கொண்டு மெதுவாக, மிதமாக வார வேண்டும். சாஃப்டான பிரஷ்/சீப்பு பயன்படுத்துவது மிகவும் நல்லது.

7. முடி வெட்டுதல் 

சீரான இடைவெளியில் குழந்தைகளுக்கு முடி வெட்டுவதால் முடி பிளவு ஏற்படாது. மேலும் குழந்தைகள் அழகாக இருப்பார்கள். குழந்தைகளின் கண்கள் வரை முடி வளர விடக் கூடாது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…