வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க டிப்ஸ்

Public Breastfeeding Tips | வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க டிப்ஸ்

பொதுவாகவே பெரும்பாலான தாய்மார்கள் வெளியிடங்களில் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு மிகவும் தயங்குகின்றனர். இத்தகைய கூச்ச சுபாவத்தால் பெரும்பாலான தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதைக் கூட தவிர்க்கின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும். மேலும் சிலர் இதனால் குழந்தையை கொண்டு வெளியில் செல்வதையும் தவிர்க்கின்றனர். மேலும் மருத்துவர்கள் குழந்தைக்கு 6 மாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்க பரிந்துரைக்கின்றனர். இந்த பதிவில் உள்ள வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க உதவும் குறிப்புகள்(Public Breastfeeding Tips) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சௌகரியமான ஆடை அணிதல்(Wear comfortable clothes)

தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை எளிதாக்க பிரத்தியேகமான பல்வேறு மேலாடைகள் கடைகளில் கிடைக்கின்றன. இந்த வகையான மேலாடைகளில் மறைப்புகளுடன் கூடிய துவாரங்கள் இருக்கும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது இந்த மேலாடையில் உள்ள பொத்தானை நீக்கி குழந்தைக்கு பால் புகட்டி பசியை ஆற்றலாம்.

மேலே கூறிய மேலாடையை அணிவதற்கு பதிலாக சற்று தளர்வான சட்டையை தேர்வு செய்யலாம். இதுவும் பால் கொடுக்க மிகவும் சௌகரியமாக இருக்கும். மேலும் சற்று மென்மையான பருத்தி துணியை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் குழந்தை பால் குடிக்கும் போது குழந்தையின் முகமானது துணியின் மீது படும். அந்த நேரம் துணி குழந்தைக்கு உறுத்த கூடாது. உறுத்தினால் குழந்தை பால் குடிக்காது.

இதையும் படிங்க: குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்

வீட்டிலே பயிற்சி செய்தல்(Practice at home)

பெரும்பாலான பெண்களுக்கு வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்கும் போது உடலின் பாகம் தெரிவது தான் உறுத்தும் விஷயமாக இருக்கிறது. அதற்கு தீர்வு காண முதலில் வீட்டில் கண்ணாடி முன் அமர்ந்து பால் கொடுத்து பயிற்சி செய்து பார்க்கலாம். இதை பல கோணங்களில் முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலமாக உடலின் பாகம் முழுவதும் மறைக்கும் நிலையை அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் இந்த பயம் நீங்கும். பொது இடம் மற்றும் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் மறையும்.

இதையும் படிங்க: குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியம்

நர்சிங் பேக்(Nursing pack)

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தற்போதுள்ள இன்னொரு நல்ல விஷயம் என்ன என்றால் நர்சிங் பேக்(Nursing pack). இந்த நர்சிங் பேக் பற்றி பெரும்பாலான தாய்மார்களுக்கு தெரிவதில்லை. இது எட்டு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த உகந்தது. இந்த நர்சிங் பேக் பயன்படுத்தி நடக்கும் பொழுது கூட குழந்தைக்குத் தாய்ப்பால் தர முடியும்.

நர்சிங் கவர்(Nursing cover)

நர்சிங் கவர்(Nursing cover) பயன்படுத்துவது மிகவும் எளிமையானது மற்றும் சௌகரியமானது. குழந்தையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் பொழுது இந்த நர்சிங் கவர் மட்டுமே போதுமானது. இது தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதைச் சுலபமாக்கி விடுகிறது.

பொதுவாகவே நர்சிங் கவரை தேர்வு செய்யும் பொழுது துணியின் ரகத்தைக் கருத்தில் கொள்வது முக்கியமான ஒன்று. சற்று மென்மையான துணி என்றால் பால் குடிக்கும் போது குழந்தைக்குப் போதிய காற்றோட்டம் கிடைக்கும். இல்லையென்றால் போதிய காற்று கிடைக்காமல் குழந்தை சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் இதனால் மூச்சு முட்டவும் வாய்ப்பு உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.

இதையும் படிங்க: குழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்

மன தைரியத்துடன் இருங்கள்(Be confident)

வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுப்பது பற்றிய கவலையில் தாய் தனது குழந்தை உடன் வெளியே வருவது தடைப்படக் கூடாது. வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு இயற்கையான விசயம் என்பதை தாய்மார்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களின் குழந்தையின் பசியை தீர்ப்பது என்பது ஒவ்வொரு தாயின் தலையாய கடமை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

குழந்தைக்கு வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு சங்கடப்பட்டு, குழந்தைக்கு வெளியில் செல்லும் நேரம் பார்த்து குழந்தை பசியில் இருக்காத நேரம் பால் கொடுப்பது மிகவும் தவறு. மேலும் குழந்தையை அடுத்தவரின் பொறுப்பில் விட்டுச் செல்வதும் தவறு. மன தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது உன்னதமான செயல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரியான இடத்தை தேர்வு செய்தல்(Choose right place)

குழந்தையுடன் வெளியே கிளம்பும் போது முதலில் செல்லும் இடங்களை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். கோவில்கள், மால்ஸ், விமான நிலையம் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் தாய்ப்பால் தருவதற்கென இடம் உள்ளது. எனவே இந்த இடங்களுக்கு செல்லும் பொழுது தாய்ப்பால் கொடுப்பதை பற்றி கவலைப்படத் தேவையில்லை. மேலும் இதுபோன்ற இடங்களில் பல்வேறு தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதைப் பார்க்கலாம். இது மேலும் ஒரு இலகுவான சூழலை ஏற்படுத்தும்.

இன்று தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வானது மக்களிடம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பூரண ஆரோக்கியம் மற்றும் மூளை வளர்ச்சியுடனும் திகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. தெரிவிக்கின்றன. எனவே வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது எந்த வகையிலும் தடைபட்டுவிட கூடாது. மேற்கண்ட குறிப்புகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பொது இடங்களில் எளிமையாகவும் சுலபமாகவும் தாய்ப்பால் புகட்டலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment