மார்பக காம்பு வறட்சி & புண் குணமாக வீட்டு வைத்தியம்

தாய்மை அடைந்த பெண்களுக்கு முதல் முறையாகக் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் அனுபவம் ஏற்படும். இந்தச் சமயத்தில் பொதுவாகவே எல்லா தாய்மார்களுக்கும் மார்பக மூலைக் காம்பு பகுதி மிருதுவான தன்மையில் இருக்கும். ஆனால் இது வெறும் சில நாட்களுக்கு மட்டுமே. அதற்குப் பின் முலைக்காம்பு பகுதியின் மிருது தன்மை குறைந்துவிடும். அந்த மாதிரியான சூழலில் தாய்ப்பால் புகட்டும் பெண்களின் மார்பக முலைக் காம்புகள் வறண்டு வலி ஏற்படும். இந்த வலி மிகவும் கடுமையானதாக இருக்கும். மார்பக முலைக் காம்புகள் வறண்டு போய் புண் ஏற்பட்டுவிடும். மேலும் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது இந்த வலி அதிகமாகும். இந்தப் பதிவில் மார்பக முலைக் காம்புகள் வறண்டு போய் புண் ஏற்பட என்ன காரணம்? என்பதைப் பற்றியும், மார்பக காம்பு வறட்சி & புண் குணமாக வீட்டு வைத்திய குறிப்புகள்(Remedies to Cure Crack Nipple) என்ன? என்பதைப் பற்றியும் தெளிவாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  தாய்ப்பால் சேமிக்க உதவும் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்துவது எப்படி?

மார்பக காம்பில் புண்கள் ஏற்பட என்ன காரணம்?

 • குழந்தையைச் சரியான நிலையில் பிடித்து தாய்மார்கள் தாய்ப்பால் புகட்ட வேண்டும். தவறான நிலையில் குழந்தையை அணைத்து தாய்ப்பால் புகட்டும் பொழுது முலைக்காம்புகளில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
 • முலைக்காம்புகளில் புண்கள் ஏற்பட காரணம் குழந்தையின் வாய் பகுதி தவறான நிலையில் தாயின் மார்பு பகுதியைக் கவ்வி இருப்பதுதான். இதனால் அந்தப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு புண்கள் வரும். இதனால் பாலூட்டும் நேரம் முழுவதுமே வலி இருந்த வண்ணம் இருக்கும்.
 • சில குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் பொழுது தாயின் மார்பு பகுதியை இறுக்கமாகக் கவ்வி இழுப்பார்கள். இதனால் கூட முலைக்காம்புகளில் புண் ஏற்பட்டு விடும்.
 • குழந்தைப் பிறந்த பிறகு, தாய்மார்களுக்கு மார்பகங்கள் பால் வரத்தால் சற்று பெரிதாகக் காணப்படும். இதனால் மார்பகங்களில் தோல் பகுதி சற்று விரிவடையும். இதன் மூலம் மார்பக பகுதி & முலைக்காம்புகளில் வறட்சி காணப்படும்.

இதையும் படிங்க:  குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

தாய்மார்களின் முலைக்காம்புகளில் ஏற்படும் புண்கள் மூலமாக ஏற்படும் வேதனையும், வலியும் பால் புகட்டும் இனிய அனுபவத்தை கசப்பானதாக மாற்றிவிடும். சில தாய்மார்கள் இதற்குப் பயந்து கொண்டு தாய்ப்பால் தருவதை நிறுத்திவிடுகின்றார்கள். இது முற்றிலும் தவறான செயல். இதற்காக உள்ள தீர்வுகளைப் பின்பற்றி பிரச்சனையைச் சீர் செய்ய வேண்டும். தாய்ப்பாலை நிறுத்துவது வழி கிடையாது. மேலும் முலைக்காம்புகளில் புண் இருக்கும்போதும் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டலாம். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது.

மார்பக முலைக்காம்பு வறட்சி & புண் குணமாக வீட்டு வைத்திய குறிப்புகள்

1. கற்றாழை

கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி உள்ளே உள்ள வளவளப்பான ஜெல் பகுதியை எடுத்து மார்பக முலைக்காம்புகளில் நன்றாக தடவிக்கொள்ள வேண்டும். இயற்கையாகவே கற்றாழைக்கு ஈரப்பதத்தை ஏற்படுத்தும் தன்மை அதிக அளவு உள்ளது. இதனால் மார்பக முலைக்காம்புகளில் ஏற்பட்ட வறட்சி தன்மை நிவர்த்தியாகும். மேலும் கற்றாழை புண்களை ஆற்றும் ஆற்றல் கொண்டது.  எனவே கற்றாழையை தினமும் தடவிக் கொள்வதன் மூலம் முலைக் காம்புகளின் ஏற்பட்ட புண்கள் குணமடையும்.

2. வெண்ணெய்

நல்ல தரமான வெண்ணெய்யை எடுத்துக் கொண்டு மார்பகத்தில் புண் ஏற்பட்ட பகுதியில் தடவ வேண்டும். வெண்ணெய் முலைக்காம்பு பகுதியில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்தப் பெரிதும் உதவுகிறது.

3. ஐஸ் கியூப்

புண்ணான மார்பு & முலைக்காம்பு பகுதியில் வலி அதிகமாகக் காணப்படும். இதற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் நல்ல ஒரு பலனைத் தரும். ஒரு பருத்தி துண்டின் உள்ளே சிறிதளவு ஐஸ் கட்டிகளை எடுத்துச் சுற்றிக் கொள்ள வேண்டும். இதனை சுமார் பத்து நிமிடம் வரை மார்பகம் & முலைக்காம்பு பகுதியில் வைத்து நன்றாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதைத் தினமும் மூன்று அல்லது நான்கு தடவை செய்ய வேண்டும்.

4. தாய்ப்பால்

முலைக்காம்புகளில் ஏற்படும் புண்களை குணப்படுத்த தாய்ப்பால் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். தாய்ப்பாலுக்கு இயற்கையாகவே புண்களை ஆற்றும் தன்மை உண்டு. கிருமித் தொற்றுகளை அழிக்கும் தன்மை கொண்ட தாய்ப்பால் மார்பக காம்புகளில் உள்ள புண்கள் மற்றும் வறட்சி தன்மையைக் குணமடையப் பெரிதும் துணை புரிகிறது. பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஐந்தாறு முறை தாய்ப்பாலை மார்பக காம்பு பகுதியில் தடவிக்கொள்ளலாம். இது மிகவும் எளிமையான மற்றும் பலனளிக்கக் கூடிய சுலபமான வழியாகும்.

5. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயானது சருமத்தை மிருதுவாக்கும் குணம் கொண்டது. முலைக்காம்புகளில் புண் ஏற்பட்ட பகுதிகளில் தினம் மூன்று நான்கு தடவைகள் தேங்காய் எண்ணெய்யைத் தடவிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தோலின் வறட்சி நீங்கி புண்கள் விரைவில் ஆறும்.

குறிப்பு: செக்கில் ஆட்டிய தூய்மையான தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவதன் மூலமே உரியப் பலன் கிடைக்கும் என்பதைத் தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

6. பால் கொடுக்கும் நிலை

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது குழந்தையின் வாய், முலைக்காம்பை முழுவதுமாக கவ்வி உள்ளதா என்பதைச் சரி பார்க்கவும். தாய்மார்கள் தங்களின் கையைக் குழந்தையின் தலை பகுதியில் வைத்து , குழந்தை இடம் நகராத வகையில் பற்றிக் கொள்ளவும்.

7. காற்றோட்டம் அவசியம்

தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் சற்று தளர்வான ஆடைகளை உடுத்துவது நல்லது. மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியும்போது போதிய காற்றோட்டம் கிடைக்காது. தளர்வான ஆடைகளை அணிவதன் மூலம் உடல் பகுதிகளுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்கும். மேலும் முலைக்காம்புகளில் ஏற்பட்ட புண்களும் விரைவில் ஆறும்.

8. ஆலிவ் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யை போலவே ஆலிவ் எண்ணெய்யும் முலைக்காம்புகளில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது. ஆலிவ் எண்ணெய்யை உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு விரல்களைக் கொண்டு மார்பக முலைக்காம்புகளில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இது நல்ல பலனைத் தரும்.

9. துளசி இலைகள்

தேவையான அளவு துளசி இலைகளைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மார்பக முலைக்காம்புகளில் தடவிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வர வேண்டும். துளசி இலையானது மார்பக காம்புகளில் ஏற்பட்ட வறட்சியையும் புண்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

10. வைட்டமின் சி

குழந்தைப் பேறு அடைந்த தாய்மார்கள் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இது சருமத்தில் ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய உதவும்.

வைட்டமின் சி அதிகம் உள்ளவை:

 • ஆரஞ்சு பழங்கள்
 • எலுமிச்சை பழம்
 • கிவி
 • கொய்யாப்பழம்
 • ஸ்ட்ராபெரி
 • பசலைக்கீரை
 • தக்காளிப் பழங்கள்
 • சர்க்கரைவள்ளிக் கிழங்கு
 • முட்டைகோஸ்
 • பூக்கோசு
 • திராட்சைப் பழம்

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவரை அணுகவும்

முலைக்காம்புகளில் ஏற்படும் புண்கள் சாதாரண அளவில் இருக்கும்பட்சத்தில் மேலே சொன்ன வீட்டுக்குறிப்புகள் பயனளிக்கும். அதே சமயம் புண்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தைத் தடவி முலைக்காம்புகளில் ஏற்படும் புண்களை குணப்படுத்தலாம்.

குறிப்பு: தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பு தாய்மார்கள் தங்களின் முலைக்காம்பு பகுதியைச் சுத்தப்படுத்திக் கொள்வது மிகவும் உகந்தது.

இதையும் படிங்க:  தொங்கும் மார்பகங்களை டைட்டாக்க வேண்டுமா? இத படிங்க…

மேலே சொன்ன வீட்டு வைத்திய குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயன்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம். வலியும் வேதனையும் இன்றி, தாய்ப்பால் புகட்டுவது ஒரு சுகமான பயணமாக எல்லா தாய்மார்களுக்கும் இருக்கட்டும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…