முகத்தில் உள்ள கரும்புள்ளியைப் போக்க வீட்டு வைத்தியம்

Home Remedies for Dark Spots | கரும்புள்ளியைப் போக்க வீட்டு வைத்தியம்

கரும்புள்ளிகள்(Dark Spots) என்பது அனைவரின் சருமத்திலும் கட்டாயம் இருக்கும். பலருக்கு அது சிறியதாகவும், கண்ணிற்கு புலப்படாதவாறும் இருக்கும். ஒரு சிலருக்கு மிகப்பெரிய அளவில், அதுவும் முகத்தில் அசிங்கமாக இருக்கும். கரும்புள்ளியானது அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றுதல், வயது கூடுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கெமிக்கல்களாலும் ஏற்படலாம். கரும்புள்ளிகளை வீட்டு வைத்தியம்(Home Remedies for Dark Spots) மூலம் மெதுவாக மறையச் செய்யலாம்.

இதையும் படிங்க: முகப்பரு வராமல் தடுக்க வீட்டு மருத்துவம்

கற்றாழை

கற்றாழையானது  ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று. இந்த கற்றாழை முகத்தில் உள்ள அசிங்கமான மற்றும் கரும்புள்ளிகளை மெதுவாக மறையச் செய்வதில் வல்லது. கற்றாழையில் உள்ள சதை போன்ற ஜெல்லை எடுத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் தடவலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் கரும்புள்ளிகளில் இருந்து தீர்வு பெறலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. இது  கரும்புள்ளிகளைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆகவே தேங்காய் எண்ணெயை தினமும் தவறாமல் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வரவேண்டும். இதனால் குறிப்பிட்ட காலத்தில் கரும்புள்ளிகள் மறைய ஆரம்பிப்பதோடு , மீண்டும் வராமலும் தடுக்கலாம்.

ஆரஞ்சு தோல் பவுடர்

ஆரஞ்சுப்பழம் வாங்கினால், அதன் தோலைத் தூக்கிப் போடாதீர்கள். ஏனெனில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்குவதற்கு, அது பெரிதும் உதவியாக இருக்கும். ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து, கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ளவேண்டும். பின்பு  தேவையான போது ஒரு பௌலில் சிறிது ஆரஞ்சு தோல் பொடி, தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் சருமம் புத்துணர்ச்சி பெறுவதோடு, காலப்போக்கில் கரும்புள்ளிகள் மறைவதையும் காணலாம்.

ஹோம் ஃபேஸ்பேக்

இது எளிமையான மற்றும் ஈஸியான வீட்டில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக். இது  முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க உதவியாக இருக்கும். இந்த ஃபேஸ்பேக் செய்வதற்கு ஒரு பௌலில் சந்தன பவுடர், ரோஸ் வாட்டர், கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட்டாக  செய்து கொள்ளவேண்டும். பின் அந்த கலவையை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள் மறைவதை காணலாம்.

எலுமிச்சை

எலுமிச்சையில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான நன்மைகள் உள்ளது. எலுமிச்சையைக் கொண்டு எளிமையான முறையில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்கலாம். அதற்கு எலுமிச்சை சாற்றினை கரும்புள்ளி உள்ள இடத்தில் நேரடியாக தடவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும்.

பால்

பால் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது சருமத்தை குளுமை அடையச் செய்கிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். அதற்கு பாலை பச்சையாகவோ அல்லது மோர் வடிவிலோ பயன்படுத்தலாம். அதுவும் பாலை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் பஞ்சை பயன்படுத்தி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வெங்காயம் மற்றும் பூண்டு சாறு

வெங்காயம் மற்றும் பூண்டு சாறு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க வல்லது. அதற்கு இந்த இரண்டு சாற்றினையும் ஒன்றாக கலந்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இதனால் கருமையான புள்ளிகள் மறைய ஆரம்பித்து, நாளடைவில் காணாமல் போய்விடும்.

வைட்டமின் ஈ ஆயில்

வைட்டமின் ஈ ஆயிலில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள், சருமத்தின் நிறத்தை சமன் செய்வதோடு, கரும்புள்ளிகளைக் குறைக்கவும் உதவும். வைட்டமின் ஈ எண்ணெய் பல்வேறு இயற்கை பொருட்களில் உள்ளது. அந்த பொருட்களைப் பயன்படுத்தி வந்தாலே, கரும்புள்ளிகள் மறைய ஆரம்பித்து, ஒரு நல்ல மாற்றத்தை சருமத்தில் காணலாம். இந்த வைட்டமின் ஈ ஆலிவ் ஆயிலில் அதிகம் உள்ளது.

காய்கறிகள்

காய்கறிகளான தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை தினமும் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால், அதில் உள்ள குளிர்ச்சித் தன்மை கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கரும்புள்ளியை நீக்க தக்காளியைப் பயன்படுத்துவதாக இருந்தால், தக்காளியை வெட்டி ஒரு துண்டு எடுத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் பகுதியில் சிறிது நேரம் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவேண்டும்.

உருளைக்கிழங்கு கொண்டு கரும்புள்ளி நீக்க, ஃப்ரிட்ஜில் இருந்து உருளைக்கிழங்கு  எடுத்து ஒரு துண்டு வெட்டி எடுத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி வந்தாலே கரும்புள்ளிகளை முற்றிலும் போக்கலாம்.

பால் மற்றும் தேன் பேஸ்ட்

ஒரு குவளையில் பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, நீரால் கழுவ வேண்டும். தேன் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களும் வறட்சியான சருமத்திற்கு மிகவும் நல்லது. இவை சருமத்திற்கு உடனடி பொலிவைக் கொடுப்பதோடு, சரும வறட்சியையும் தடுக்க உதவுகிறது. தினமும் இதை பயன்படுத்தி வந்தால், அசிங்கமான மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment