ஒவ்வாமை(Allergies)

ஒவ்வாமை(Allergies)

ஒவ்வாமை(Allergies)
ஒவ்வாமை(Allergies)

நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாத எதுவாக இருப்பினும் அது ஒவ்வாமை(Allergies) என்று அழைக்கப்படுகிறது. நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வேலை. நோய் எதிர்ப்பு மண்டலமானது நமது உடலை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று நினைக்கும் எதையும் எதிர்த்து போராடுகிறது. ஒவ்வாமை என்பது நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உண்டாகும் கோளாறினால் ஏற்படும் ஒரு நிலையாகும்.

நம் சுற்றுச்சூழலில் இருக்கின்ற சிலப்பொருட்களால் கூட ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. மேலும் பூச்சிக்கடி போன்றவற்றாலும் உடலில் ஒவ்வாமை ஏற்படும். ஒவ்வாமை ஏற்பட்டால் அரிப்பு, உடலில் தடிப்பு, மூக்கொழுகல், தும்மல், மற்றும் கண்களில் நீர்வழிதல் போன்ற விளைவுகள் ஏற்படும்.

ஒவ்வாமையின் அறிகுறிகள்(Symptoms of Allergies)

  • சுவாசித்தலில் பிரச்சினை
  • கண்களில் எரிச்சல் அல்லது அரிப்பு
  • கண்ணீர் வடிதல்
  • கண்கள் சிவத்தல் மற்றும் கண்களில் வீக்கம்
  • இருமல்
  • தோல் அரிப்பு, தோல் மேடாயிருத்தல் மற்றும் தோல் சிவந்திருத்தல்
  • மூக்கு ஒழுகுதல்
  • மூச்சுவாங்குதல்
  • முகத்தில் வீக்கம்
  • தொண்டையைச் சுற்றி வீக்கம்

ஒவ்வாமையின் வகைகள்(Types of Allergies)

நமக்கு ஏற்படும் விளைவுகளின் அடிப்படையில் ஒவ்வாமையை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. மிதமான ஒவ்வாமை

சருமம் அல்லது தொண்டையில் சிறு பாதிப்புகளைக் கொடுப்பது மிதமான ஒவ்வாமை என அழைக்கப்படுகிறது.

2. தீவிர ஒவ்வாமை

தீவிர ஒவ்வாமையானது உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதத்தை உண்டாக்கும். இது ‘அனாபிலாக்‌சிஸ்’ (Anaphylaxis) என அழைக்கப்படுகிறது.

3. இன்ஹேலன்ட் ஒவ்வாமை

நாம் உண்ணும் உணவு மற்றும் சுவாசிக்கும் காற்று போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமை ‘இன்ஹேலன்ட் ஒவ்வாமை’ (Inhalant Allergy) என அழைக்கப்படுகிறது.

4. ஆக்குபேஷனல் ஒவ்வாமை

நாம் வேலைசெய்யும் இடத்தில் உள்ள மரத்துகள்கள் மற்றும் வேதிப்பொருள்கள், கட்டுமானப் பணியிடத்தில் உள்ள சிமென்ட் போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமை ‘ஆக்குபேஷனல் ஒவ்வாமை’ (Occupational Allergy) என அழைக்கப்படுகிறது.

5. இண்டோர் அலர்ஜி

வீட்டில் உள்ள தூசுக்கள் மற்றும் பூஞ்சைகள் மூலம் ஏற்படும் ஒவ்வாமை ‘இண்டோர் அலர்ஜி’ (Indoor Allergy) என அழைக்கப்படுகிறது.

6. அவுட்டோர் அலர்ஜி

வாகனப்புகை, சிகரெட் புகை, மகரந்தத்துகள்கள் மற்றும் நுண்ணணுக்கள் மூலம் ஏற்படும் ஒவ்வாமை ‘அவுட்டோர் அலர்ஜி’ (Outdoor Allergy) என அழைக்கப்படுகிறது.

7. ஊசி மருந்து ஒவ்வாமை 

நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளினால் கூட ஒவ்வாமை ஏற்படும். இது ஊசி மருந்து ஒவ்வாமை(Drug Allergy) என அழைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு பெனிசிலின் (Penicillin) ஊசி ஏற்றுக்கொள்ளாது. இது தெரியாமல் மருத்துவர் பெனிசிலின்  ஊசியைச் செலுத்திவிட்டால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டு தடிப்புகள் மற்றும் தொண்டையில் வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

8. உணவு ஒவ்வாமை

உணவு ஒவ்வாமை என்பது பலருக்கும் ஏற்படும் ஒன்று. கத்தரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, பால், டீ மற்றும் காபி போன்றவை பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஒவ்வாமை உள்ள உணவை உண்பதால் உடலில் தடிப்புகள், சுவாசப் பிரச்னை மாறும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம். எனவே உண்ணும் உணவு ஓவ்வாமை பிரச்னையை ஏற்படுத்தினால் கண்டிப்பாக அந்த உணவை தவிர்க்க வேண்டும்.

9. வளர்ப்புப் பிராணிகளால் ஒவ்வாமை

ஒரு சிலருக்கு நாய், பூனை போன்ற வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். ஒருவருக்கு சுவாசம் தொடர்பான ஒவ்வாமை ஏற்கனவே இருந்தால் அவர்களுக்கு வளர்ப்புப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.ஆதலால், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், சுவாச ஒவ்வாமை உள்ளவர்கள், மற்றும் பிராணிகள் ஒவ்வாமை உள்ளவர்கள் வீட்டில் உள்ள வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும்.

ஒவ்வாமையை கண்டுபிடித்து தடுப்பது எப்படி?

ஒவ்வாமையை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னர் எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். எது நமது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதோ அதை தனிமைப்படுத்த வேண்டும்.

உணவில் ஒவ்வாமை ஏற்படும் போது ஒவ்வொரு உணவுப்பொருளாக சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது எந்தப் பொருளால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை நீக்கலாம்.

இதேபோன்று வீட்டில் பயன்படுத்தும் சோப், பவுடர், வாசனைப்பொருள்கள் மற்றும் எண்ணெய் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி அதில் இருந்து எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது என கண்டறியலாம்.

வாழும் இடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவைகள்  எடுத்துக்காட்டாக புத்தகத் தூசி, பஞ்சுத்துகள், ரம்பத்தூள் மற்றும் கடுமையான வாசனைகள் போன்றவை ஏதும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு அதனை தவிர்ப்பதன் மூலம் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கலாம்.

ஒவ்வாமைக்கான மருத்துவம்(Allergy treatments)

மருத்துவர்கள் ஒவ்வாமைக்கு ஆன்டி ஹிஸ்டமைன் என்ற ஒரு மருந்தை பரிந்துரைக்கின்றனர். ஒரு சிலருக்கு இந்த ஆன்டி ஹிஸ்டமைன் மருந்தை பயன்படுத்தும் போது தூக்கம் வரும். எனவே இந்த மருத்துவர்கள் மருந்தைப் பயன்படுத்தும் போது வாகனம் ஓட்டவோ மற்றும் இயந்திர வேலைகள் செய்யவோ கூடாது.

ஒவ்வாமை இருக்கும் போது காய்ச்சல் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து நன்கு ஆலோசித்த பின்னரே ஒவ்வாமைக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…