வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

நம் வீட்டு சமையலறையில் நாம் தினசரி பார்க்கும் ஒரு பொருள் வெந்தயம். என்ன சமையல் செய்தாலும் அதில் வெந்தயத்தின் பங்கு சிறிதளவேனும் இருக்கும். இதை எதற்காக சேர்க்கின்றோம் என்று தெரியாமல் சேர்த்துக்கொண்டிருப்போம். உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். வெந்தயத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? வெந்தயத்தின் மருத்துவப் பயன்கள்(Fenugreek Benefits) என்ன? என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவும்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மமும் உள்ளது. வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள்(Fenugreek Benefits) பின்வருமாறு:

மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில் ஒரு சில பெண்கள் அதிக உஷ்ணமாக உணரக்கூடும். மேலும் இந்த நேரத்தில் கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் வெந்தயத்தை சாப்பிடுவது சற்று வெப்பத்தை தணிப்பதுடன், வயிற்று வலியையும் குறைக்கும். பெண்களுக்கு வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள்(Fenugreek Benefits) ஏராளம்.

மாதவிடாய் சுழற்சி முழுமையாக நிற்கும் காலகட்டத்தில், அதாவது 40 வயதுள்ள பெண்களுக்கு உடல்நிலையானது மிகவும் மோசமாக இருக்கும். மாதவிடாய் நிற்கும் நேரத்தில் அவர்களுக்கும் அதிக உடல் வெப்பம் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இந்நேரத்தில் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் சூடு குறைவதுடன், உடல்நிலையும் சீராக இருக்கும். மேலும் இந்த பிரச்சனைக்கு வறுத்த வெந்தயத்துடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும்.

சிக்கலற்ற பிரசவம்

முளைக்கட்டிய வெந்தயத்தை தினசரி சிறிதளவு சாப்பிடுவதன் மூலம் பிரசவ நேரத்தில் சந்திக்கும் சிரமத்தைக் குறைக்கலாம். கருவுற்ற பெண்கள் வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. கர்ப்பப்பை சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து தினசரி சமையலில் இதை சேர்த்துக்கொள்ளலாம்.

செரிமானக்கோளாறு

செரிமானக்கோளாறால் அவதிப்படுபவர்கள் தினசரி வெந்தயத்தை சாப்பிடலாம். வெந்தயத்தை வெறுமனே அல்லது முளைக்கட்டிய வெந்தயம் சாப்பிடலாம். இது செரிமான பிரச்சனையை நீக்குவதுடன் வாயுத் தொல்லையையும் சரிசெய்கிறது.

தலைமுடி வளர்ச்சி

தலை முடி வளர்ச்சியில் வெந்தயத்தின் பங்கு அளப்பரியது. இதில் உள்ள எண்ணெய் பசையானது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் தயாரிப்பில் வெந்தயம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெந்தயம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது.

சிறுநீர் பிரச்சனை

சிறுநீர் தொடர்பானப் பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை தினசரி உணவில் சேர்த்து வரலாம். இது உடலைக் குளிர்ச்சியாக வைப்பதுடன், உடல் வறட்சியை போக்கி சிறுநீரைப் பெருக்க உதவுகிறது. இதனால் சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

சீதபேதி

சீதபேதி உடல் வெப்பம் காரணமாக ஏற்படும். சீதபேதியால் அவதிபடுபவர்களுக்கு வெந்தயம் மிகச் சிறந்த மருந்து. வெந்தயம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. வெந்தயத்தை அப்படியேவோ அல்லது நன்கு வறுத்து நீர் மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சாப்பிட்டாலும் சீதபேதி குணமாகும். வெந்தயத்தை மோரில் ஊற வைத்து குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும். மோரில் ஊற வைத்த வெந்தயமானது வாயு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

பொடுகுத்தொல்லை

வெந்தயம் மற்றும் கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் போட்டு நீண்ட நேரம் ஊற வைத்து குளிக்கும் போது தலையில் நன்கு தேய்த்து அலசிவந்தால் பேன் மற்றும் பொடுகு போன்றவை நீங்கும். தேங்காய் எண்ணெய்க்குப் பதில் பால் கூட பயன்படுத்தலாம்.

தாய்ப்பால்

வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு சீராகும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு

வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது, கார்போஹைட்ரேட் அளவை குறைத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்கிறது.

மலச்சிக்கல்

தினசரி வெந்தயம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தீர்வு பெறலாம். வெந்தயமானது நாம் சாப்பிடும் உணவை நன்கு செரித்து, வயிற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

வயிறு மற்றும் தொண்டைப் புண்

வெந்தயம் வயிறு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் புண்களை குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள உடலை குளிர்ச்சியாக்கும் தன்மையானது உடலில் ஏற்படும் கொப்புளங்களை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்றவற்றையும் வெந்தயம் குணப்படுத்துகிறது.

சரும பளபளப்பு

வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி யானது சரும பளபளப்பிற்கு உதவுகிறது. வெந்தயத்தை நன்றாக அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் சருமத்தின் வறட்சித்தன்மை நீங்கி முகம் பொலிவு பெரும். மேலும் தினமும் இரவு தூங்கும் முன்பு வெந்தயத்தை பொடிசெய்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கருவளையம் மற்றும் கரும்புள்ளிகள்

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மற்றும் கண்ணில் ஏற்படும் கருவளையம் ஆகியவற்றை நீக்க வெந்தயத்தில் உள்ள வைட்டமின்கள் உதவுகிறது. வெந்தயத்தை நன்றாக அரைத்து முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள், பாக்டீரியா மற்றும் அழுக்குகள் போன்றவை வெளியேறிவிடும்.

உதடு வெடிப்பு

பெரும்பாலும் பெண்களுக்கு உடல் சூடு காரணமாக உதடுகள் வெடிக்கும். எனவே அவர்கள் தினமும் வெந்தயத்தை குளிர்ந்த நீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றிலும் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பாகவும் குடித்து வந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உதடு வெடிப்பு மறைந்து விடும்.

தோல் நோய்கள்

சொறி மற்றும் சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு வெந்தயம் மிகச்சிறந்த மருந்து. வெந்தயத்தை ஊற வைத்து நன்றாக அரைத்து அதனை தோல் பாதிப்புள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், தோல் நோய் முற்றிலுமாக நீங்குவதுடன், தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் தடிப்பு போன்றவையும் மறைந்து விடும்.

முகப்பரு

வெந்தயத்தை ஊற வைத்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி, சுமார் 30 நிமிடங்கள் வரை உலர வைத்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால் முகப்பரு நீங்கும்.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து இரண்டு டம்ளர்கள் தினமும் குடித்து வந்தால் உடல் எடை படிப்படியாகக் குறைவதை காணலாம். மேலும் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் வெந்தயத்தை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது கொழுப்பை சிதைத்து வெளியேற்றிவிடுகிறது. உடல் எடை குறைகிறது என்று அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது.

சுவாசக்கோளாறு

சளி மற்றும் காய்ச்சல் காரணமாகச் சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிபடுபவர்கள், வெந்தயத்தை வெந்நீரில் போட்டுத் தினமும் குடித்து வரலாம். இது பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, சுவாசப் பிரச்சனையில் இருந்து விடுதலைப் பெற்றுத் தருகிறது.

பசியின்மை

சாப்பிட்ட உணவு முழுவதும் செரிக்காமல் தாமதாமாவதனால் தான் பசியின்மை ஏற்படுகிறது. வெந்தயம் நாம் சாப்பிட்ட உணவை உடைத்து செரிக்க வைக்கும் இயல்புடையது. இதனால் வயிற்றில் உணவு தங்குவதில்லை. பசி நேரத்துக்கு எடுக்கும். பசியின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து.

இதயப்பாதுகாப்பு

இதய நோய் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் வெந்தயத்தை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. வெந்தய விதை மற்றும் வெந்தய கீரை இரண்டும் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கக்கூடிய தன்மையுடையது. இதனால் இதயம் சீராக இயங்கி இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆண்மைக்குறைவு

ஆண்மைக் குறைவு நீங்க வெந்தயம் மிகச்சிறந்த மருந்து. ஒரு நாளைக்கு 600 மில்லிகிராம் வரை வெந்தயத்தை உண்ணும் உணவுடன் சேர்த்து உட்கொண்டால் ஆண்மைக்குறைவு சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். மேலும் வயது முதிர்வு காரணமாக உடலுறவில் நாட்டம் இல்லாமல் இருப்பவர்களும் தினசரி இதே அளவு வெந்தயத்தை எடுத்துக்கொள்ளலாம்.

வெந்தயம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுதான் என்றாலும், தினமும் மாத்திரை சாப்பிடும் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்றோர் வெந்தயத்தை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில், அவர்களுக்கு இது மோசமான பக்க விளைவுகள் ஏற்படுத்தும். மேலும் சாப்பிடும் மாத்திரையும் பலனளிக்காது.

இதையும் படிங்க: பூண்டின் மருத்துவ குணங்கள்

வெந்தயம் குழந்தைகளுக்கு செரிக்கவே செரிக்காது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பையில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மற்றபடி வெந்தயம் சாதாரணமாக அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுதான். வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள்(Fenugreek Benefits) ஏராளம் தான்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment