குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Benefits of Breastfeeding | குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள பாசபிணைப்பை அதிகரிப்பது தாய்ப்பால் மட்டும் தான். தாயின் மார்பில் இருந்து சுரக்கும் தாய்ப்பாலானது குழந்தைகளின் பசியை மட்டும் போக்குவதில்லை, அது உங்களின் குழந்தைகளை நோய் எதுவும் தாக்க விடாமல் இரும்பு அரண் போல பாதுகாக்கிறது. எனவே தான் பிறந்த உடன் தொடங்கி ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் புகட்டவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இயல்பிலே நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகமாக இருக்கிறது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பல்வேறு நன்மைகள்(Benefits of Breastfeeding) உள்ளன.

பெரும்பாலான பெண்கள் நாகரீகம் கருதி தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக புட்டிப்பால் கொடுக்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் தங்களின் மார்பின் அழகு குறைந்து விடும் என்ற தவறான எண்ணம் தான். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் மார்பு அழகு குறைவதில்லை. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மனநலம் பாதுகாக்கப்படுகிறது மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. தாயின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தால் தாய்மார்களின் அழகு கூடுமே தவிர ஒருபோதும் குறையாது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் தாய்ப்பாலில் அதிகம் உள்ளது. தாய்ப்பாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

குழந்தைகளின் பற்கள், நாக்கு போன்ற பேசுவதற்கு உதவும் உறுப்புகளின் விரைவான வளர்ச்சிக்கு தாய்ப்பால் உதவுகிறது. குழந்தைகள் பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து மருத்துவர்களின் அறிவுரையின்படி 2 வயது வரை கூட தாய்ப்பால் கொடுக்கலாம்.

குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வந்தால் 98 சதவீதம் மீண்டும் கர்ப்பம் தரிப்பது தடுக்கப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்கு விரைவில் திரும்புகிறது. குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் அதிகளவு ரத்தப் போக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தடுக்கப்படுகிறது.

தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். புட்டிப்பால் குடிப்பதால் குழந்தைக்கு அடிக்கடி வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிதல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. எனவே தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தாயின் உடல் மற்றும் மனநலம் பாதுகாக்கப்படுகிறது.

தவிர்க்க:-

தாய்மார்கள் கோபத்தில் இருக்கும் பொழுது தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. கோபத்தில் இருக்கும் தாய் தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியானது தாய்ப்பாலை நஞ்சாக்கிவிடும். இதனால் குழந்தை உடல்நலம் பாதிக்கப்படும். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் இருத்தல் அவசியம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment