குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்

Baby Skin Care Tips | குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்

குழந்தைகளின் சருமமானது பெரியவர்களின் சருமத்தை விட மிகவும் சென்சிட்டிவானது. குழந்தைகளின் சருமம் ஈரப்பதமாக  இருந்தாலும் அறை வெப்பநிலையில் அதிக நேரம் இருப்பது, உணவு ஒவ்வாமை(Food allergies) மற்றும் பருவநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளின் சருமம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்தப்பதிவில் குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்(Baby Skin Care Tips) பற்றி காணலாம்.

இதையும் படிங்க: குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியம்

தாய்ப்பால்
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அழுதால் மட்டும் தாய்ப்பால் கொடுக்காமல் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்கலாம். சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு அடிக்கடி ஸ்நாக்ஸ் கொடுக்காமல் நீர்சத்து நிறைந்த பழங்கள், இளநீர் போன்றவற்றை கொடுக்கலாம். இது குழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும்.
ஈரப்பதம்
குழந்தையை குளிப்பாட்டிய பின்பு ஆயில் கொண்டு லேசாக மசாஜ் செய்யலாம். இது குழந்தைகளின் சருமம் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
ஓட்ஸ் குளியல்
குழந்தையின் சருமம் அதிகமாக வறட்சியாக இருந்தால் அதற்கு ஓட்ஸ் குளியல் நல்ல தீர்வு அளிக்கும். ஒரு கப் ஓட்ஸை டவலில் கொட்டி நன்றாக முடிந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை சுடான தண்ணீரில் முக்கி, நன்றாக பிழிந்து குழந்தையின் உடலை துடைத்தெடுக்கலாம். இது குழந்தைகளின் சரும வறட்சியை போக்கும்.
அலர்ஜி
குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் துணிகள் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம். இல்லையெனில் இது குழந்தைகளின் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகளின் சருமத்தில் பொரிப்பொரியாக வந்தாலோ அல்லது அலர்ஜி ஏற்பட்டாலோ சுத்தமான தண்ணீரைக் கொண்டு துடைத்தெடுக்க வேண்டும். பெரும்பாலும் குழந்தை பிறந்த ஆரம்ப மாதங்களில் இப்படியான சருமப் பிரச்சனைகள் வருவது சகஜம். என்றாலும் குழந்தைகளின் சரும நலனில் அக்கறை தேவை.
டயாப்பர் ரேஷஸ்
இன்றைய இயந்திர உலகில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்துகின்றனர். நாள் முழுவதும் டயாப்பர் போடுவதால் குழந்தைகளுக்கு டயாப்பர் ரேஷஸ் வரும். குழந்தைக்கு நாள் முழுவதும் டயாப்பர் அணிவிக்காமல் தேவையான நேரங்களில் மட்டும் அணிவிக்கலாம்.
பரு
குழந்தைக்கும் சரும அலர்ஜியால் பருக்கள் ஏற்படும். பெரியவர்களுக்கு வருவது போல அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் அல்ல, குழந்தைகளின் சருமத்தில் வரும்  ஈஸ்ட் என்ற பூஞ்சைத் தொற்று மூலமாக தான். எனவே லோஷன், க்ரீம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். குழந்தையை சுத்தமாக பராமரித்தாலே இரண்டு மூன்று நாட்களில் இந்த பருக்கள் தானாக மறைந்துவிடும்.
எக்ஸிமா
எக்ஸிமா எனப்படும் சரும பாதிப்பு குழந்தையின் முகத்தில் தான் ஏற்பட வேண்டும் என்று இல்லை. உடலில் பல்வேறு இடங்களில் வரும். எனவே கவனமாக இருக்க வேண்டும். இது சிவப்பு நிறத்தில் திட்டுத் திட்டாக இருக்கும். ஆஸ்துமா அலர்ஜி அல்லது சருமப் பிரச்சனை இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளை கொஞ்சும் போதும், அதீத வறட்சி ஏற்பட்டாலும் குழந்தைக்கு இப்படியான சரும பாதிப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு அதிக வாசமுள்ள சோப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் துணியை துவைப்பதற்கான சோப்பையும் அதிக வாசம் கொண்டதாக இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
பவுடர்
குழந்தைகளுக்கு அடிக்கடி வியர்க்கிறது என்று அதிகமாக பேபி பவுடர் போடும் பழக்கம் இருந்தால் அதை உடனே தவிர்ப்பது மிகவும் நல்லது. உண்மையில் குழந்தைகளுக்கு பவுடர் என்ற ஒன்று அவசியமில்லை. அப்படி போட்டாலும் லேசாக போட்டாலே போதுமானது. அதிகமாக பவுடர் முகத்தில் அடித்தால் அவற்றை குழந்தை சுவாசித்து நுரையீரல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
குளிப்பாட்டுதல்
குழந்தையை வாரத்தில் மூன்று நாட்கள் குளிப்பாட்டினாலேபோதுமானது. உடலில் தண்ணீர் ஊற்றி குறைந்தது பத்து நிமிடமாவது இருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரிலேயே குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும்.
சோப்
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப் மூலமாகவும் சருமப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதிக வாசனை கொண்ட சோப் பயன்டுத்துவதை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கான ஸ்டாண்டர்டு சோப் வாங்குவதற்கு பதில்  ஹைப்போ அலர்ஜினிக் சோப் உள்ளது அதை பயன்படுத்தலாம்.
துடைத்தல்
குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும்  துடைக்கிறேன் என்று கூறி அழுத்தித் துடைக்க கூடாது. இவ்வாறு செய்வது குழந்தைகளின் சருமத்தை பாதிக்கும். மிருதுவான மெல்லிய துணியைக் கொண்டு லேசாக ஒத்தி எடுத்தாலே போதுமானது.
உடை
குழந்தைக்கு பாதுகாப்பு என்று ஸ்வட்டர் குல்லா போன்ற உடல் முழுவதும் போர்த்தி உள்ள உடைகளை நாள் முழுவதும் அணிவிக்க கூடாது. இந்த உடை குழந்தைகள் தங்களுக்கு  இடைஞ்சலாக உள்ளது என்று அவர்களால் சொல்ல முடியாது. எனவே இதனை தாய்மார்கள் தாங்களாகவே உணர்ந்து அசௌகரியமான விஷயங்களை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் இருக்கமான உடை அணிவித்திருந்தால் வியர்வை வெளியேற வழியின்றி அது சரும பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: குழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment